...பல்சுவை பக்கம்!

.

Saturday, November 28, 2009

குண்டப்பா & மண்டப்பா (2)


குண்டப்பா & மண்டப்பா (2) நகைச்சுவை

குண்டப்பா & மண்டப்பா (1) இங்கே!

குண்டப்பா, தனது வீட்டின் சுவரில் ஆணி அடிப்பதற்காக ஏணியில் ஏறினார்.
உதவி மண்டப்பா அவர்கள். குண்டப்பா ஏணியில் ஏறியதும், மண்டப்பா
ஆணியையும சுத்தியலையும் எடுத்து குண்டப்பாவிடம் கொடுத்தார்.

மண்டப்பா கொடுத்த ஆணியை வாங்கி அப்படியே சுவரில்
வைத்து அடித்தார் குண்டப்பா. அதாவது தலைப் பக்கத்தை
சுவரில் வைத்து, கூர்முனையை சுத்தியலால் அடித்தார்
குண்டப்பா. அதனால் ஆணி சுவரில் இறங்கவில்லை.

நான்கு தடவைகள் அடித்து பார்த்துவிட்டு, "எ‌ன்ன மண்டப்பா
இ‌‌ந்த ஆணி சுவரில் இறங்க மாட்டேங்குதே" என்றார் குண்டப்பா.

வாங்கிப்பார்த்துவிட்டு, "அட இ‌து தலைகீழ் மாற்றமாக தயா‌ர்
பண்ணி இருக்கான்கள்" எ‌ன்று விளக்கினார் மண்டப்பா.

"அப்படியா! அட அப்படியில்லப்பா.இ‌து எதிர் சுவரில் அடிக்க
வேண்டிய ஆணிப்பா, அப்படித்தான் இருக்கும்" எ‌ன்று
கூறிவிட்டு அப்படியே எதிர் சுவரில் போய் ஆணி அடித்து
காலண்டரை மாட்டினார் குண்டப்பா!

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

குண்டப்பா & மண்டப்பா - 3 இங்கே!



வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Sunday, November 22, 2009

சில சிந்தனைகள் (பகுதி - 5)




சில சிந்தனைகள் (பகுதி - 5)

வாழு; வாழாதே!

சிரித்து வாழ்; பலர் சிரிக்க வாழாதே!

ஏற்றமுடன் வாழ்; சீற்றத்துடன் வாழாதே!

புகழுடன் வாழ்; இகழ்வுடன் வாழாதே!

பாசத்துடன் வாழ்; பரிகாசத்துடன் வாழாதே!

இன்பத்துடன் வாழ்; சிறுமையுடன் வாழாதே!

பண்புடன் வாழ்; பராபரியாய் வாழாதே!

விழிப்புடன் வாழ்; பழிப்புடன் வாழாதே!

உழைத்து வாழ்; எத்தி வாழாதே!

களிப்புடன் வாழ்; கெலிப்புடன் வாழாதே!

பெருக வாழ்; சிறுக வாழாதே!

இணக்கத்துடன் வாழ்; பிணக்கத்துடன் வாழாதே!

மகிழ்வுடன் வாழ்; திகிலுடன் வாழாதே!

கொடுத்து வாழ்; கெடுத்து வாழாதே!

போற்றி வாழ்; தூற்றி வாழாதே!

சிறுகக் கட்டி பெருக வாழ்; பெருகக் கட்டி சிறுக வாழாதே!

கணித்து வாழ்; தனித்து வாழாதே!

மதித்து வாழ்; மிதித்து வாழாதே!

அடக்கத்துடன் வாழ்; ஆர்ப்பரித்து வாழாதே!

அன்புடன் வாழ்; அலங்கோலத்தோடு வாழாதே!

கொள்கையுடன் வாழ்; கோலத்துடன் வாழாதே!

படித்து வாழ்; பிறரை (காக்கா) பிடித்து வாழாதே!

பண்புடன் வாழ்; வம்புடன் வாழாதே!

சீராக வாழ்; சிரிக்க வாழாதே!

**நன்றி: 'நிறைந்த வாழ்வு' - அல்ஹாஜ் எம்.ஏ.ப்பி.ரஹமத்துல்லாஹ்.

**அன்பன்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Friday, November 13, 2009

பாப்பாவின் பண்புகள் (கவிதை)



நவம்பர் 14 - ஆசியாவின் ஜோதி, ரோஜாவின் ராஜா,
நேரு மாமா அவர்களின் பிறந்த நாள்.
குழந்தைகள் தினம். குழந்தைகள் தினத்தை
முன்னிட்டு இந்தக் கவிதை.

இந்தக் கவிதை ஜூலை 1982 ரத்னபாலா
பாலர் வண்ண மாத மலரில்
பிரசுரமான எனது முதல் கவிதை.
சித்திரங்கள் ஓவியர் திரு.செல்லம் அவர்கள்.

பாப்பாவின் பண்புகள் (கவிதை)
==========================

சின்னப் பாப்பா சிரிப்பிலே
சின்ன முத்து உதிருது
அழகுப் பாப்பா அன்பிலே
அன்னை முகம் மலருது!

ஆசைப் பாப்பா அழகிலே
அன்ன நடை தெரியுது
அமுதப் பாப்பா பேச்சிலே
நெஞ்சம் கொள்ளை போகுது!

இனிய பாப்பா பண்பிலே
இதயம் நெகிழ்ச்சி அடையுது
எங்கள் பாப்பா குணத்திலே
ஏக மகிழ்ச்சி துள்ளுது!

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

டிஸ்கி: இந்த ரத்னபாலா இதழை
தனது நூலக சேமிப்பிலிருந்து,
தக்க நேரத்தில் தந்துதவிய எனது
அருமை நண்பர் எழுத்தாளர்
திரு.சின்னஞ்சிறு கோபு அவர்களுக்கு
மனங்கனிந்த நன்றிகள்.

வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Wednesday, November 11, 2009

ஹாய் மதன் பதில்


(திரு.மதன் அவர்கள் வரைந்த கார்ட்டூன் படம்)

ஹாய் மதன் பதில்

ஆனந்த விகடன் 11.12.2005 இதழில் ஹாய் மதன்
கேள்வி பதில் பகுதியில் நான் கேட்ட கேள்வியும்
அதற்கு திரு.மதன் அவர்கள் கொடுத்த பதிலும்.

கேள்வி:கைரேகை மூலம் எதிர்காலத்தைக்
கணிக்க முடிவது உண்மை என்றால், ஒருவரின்
நாணயத்தன்மையை முன் கூட்டியே கைரேகை
மூலம் கணித்து, அதையே ஷ்யூரிட்டியாக
எடுத்துக் கொண்டு, வங்கிகள் ஒருவருக்குக்
கடன் வழங்க முன் வருமா?

ஹாய் மதன் பதில்: கைரேகையை யார் பார்த்துக்
கணிப்பது? வங்கி மேனேஜரா? அல்லது,
ஒவ்வொரு வங்கிக் கிளையிலும் 'கைரேகை நிபுணர்'
ஒருவரை மேனேஜர் தன் பக்கத்திலேயே
வைத்துக்கொள்ள வேண்டும். சரி, கடன்
வாங்கியவர் ஓடி விட்டால், கைரேகை
நிபுணர்தான் பணம் கட்ட வேண்டும் என்றால்,
ஓ.கே.வா?

(நன்றி: ஆனந்த விகடன்)

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Sunday, November 8, 2009

சில சிந்தனைகள் (பகுதி - 4)



சில சிந்தனைகள் (பகுதி - 4)

1. ஆணவம் வெற்றி வாய்ப்பைக் கெடுக்கும்.

2. இளமைக் கால உழைப்பு; அந்திமக் கால சுகம்.

3. ஆர்ப்பாட்டம், மறைமுக விரோதிகளை உருவாக்கும்.

4. நன்றியைப் பாராட்டுபவன், ஒருக்காலமும் நசிந்து போக மாட்டான்.

5. மிதமான வேலை, பதமாக முடியும்.

6. தற்பெருமை, உழைப்பைக் கெடுத்து, உயர்வைத் தடுக்கும்.

7. நேரத்தைத் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால், முயற்சியைத் துரிதப் படுத்த முடியும்.

8. தொண்டுள்ளம் கொண்டவன், பன்னெடுங்காலம் வாழ்வான்.

9. நயவஞ்சகனின் சகவாசம், நாசத்தின் தொடக்கம்.

10. உயர்ந்த வாழ்வின் திறவுகோல், உழைப்பாகும்.

11. புழங்காத பணமும் இறைக்காத கிணறும் பாழ்படும்.

12. பிழைப்பதற்கு வழி, உழைப்பில் இருக்கிறது.

13. செல்லம் சீரழிக்கும்; அன்பு பண்பை வளர்க்கும்.

14. தாராளமாய் இருப்பவன், ஏராளமாய் சம்பாதிப்பான், நண்பர்களை.

15. மேகம் திரண்டால் மழை; சோகம் சூழ்ந்தால் கண்ணீர்.

**நன்றி: 'சிந்தனையின் தேன் துளிகள்'-அல்ஹாஜ் எம்.ஏ.ப்பீ.ரஹமத்துல்லாஹ்.

**அன்பன்:அ..முஹம்மது நிஜாமுத்தீன்.


வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Thursday, November 5, 2009

காமெடி குடும்பம் (நகைச்சுவை)



காமெடி குடும்பம் (நகைச்சுவை)


ஓர் அம்மாவும் ஒரு மகனும் இருந்தார்கள். அந்த அம்மா தன் மகனுக்கு நல்ல குணவதியாகப் பார்த்து திருமணம் செய்து வைத்தார்கள்.

ஒரு சில மாதங்களுக்குப் பிறகு... ஒருநாள்.

அந்த மருமகள் சமையல் செய்து வைத்துவிட்டு சில பொருட்கள் வாங்கி வரலாம் என்று கடைவீதி வரைக்கும் சென்றிருந்தாள். அப்போது அந்த அம்மாள் சமையலறைக்குச் சென்று, சிறு தட்டில் சிறிது சோறும் அதற்கேற்ற குழம்பும் அதன்மேல் ஊற்றி எடுத்துக் கொண்டு,
சோறு எடுத்தது தெரியாமலிருக்க, அதை சமமாகப் பரப்பி வைத்துவிட்டு, 'மருமகள் வருவதற்குள் சாப்பிட்டு விடுவோம்' என்று நினைத்துக் கொண்டு ஓர் அலமாரியின் பின்புறமாக மறைவாகச் சென்று சாப்பிட ஆரம்பித்தார்.

சற்று நேரத்தில் கடைத் தெருவிலிருந்து திரும்பி வந்த மருமகள் பொருட்களை வைத்துவிட்டு தன் மாமியார் எங்கே என்று தேடினாள். மாமியாரைக் காணாததால், 'எங்காவது பக்கத்து வீட்டுக்கு வம்பு பேசப் போயிருப்பார்கள்' என்று முடிவு செய்து, அவளும் ஒரு தட்டில் சோறும் குழம்பும் எடுத்துக் கொண்டு, 'மாமியார் வருவதற்குள் அவருக்குக் தெரியாமல் சாப்பிட்டு விடுவோம்' என்ற எண்ணத்தோடு, மாமியார்
மறைந்திருந்த அதே அலமாரியின் பின்புறமாக மறைவைத்தேடிச் சென்றாள்.

சென்றவள் ஏற்கெனவே அங்கே மாமியார் இருப்பதைப் பார்த்து பேயறைந்ததைப்போல் விழிக்க ஆரம்பித்து, பேச்சு வராமல் தடுமாறினாள்.

மருமகளைப் பார்த்த மாமியாரும் பேந்த, பேந்த விழித்தாலும் சற்று சுதாரித்துக் கொண்டு, மருமகளிடம், "என்னடியம்மா எடுத்து வந்தாய்?"
என்று கேட்டார்கள்.

மருமகளும் தெளிவு பெற்றவளாய், "உங்களுக்கு மறுசோறு எடுத்து வந்தேன் அத்தை!" என்று பதில் சொன்னாள்.

அதற்கு, "என்னைப்போல மாமியாரும் உன்னைப்போல மருமகளும் இருந்தால் இந்த வீடு நல்லா உருப்பட்டுடும்" என்றாராம்.

காமெடியான குடும்பம்தானே சார்?

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Tuesday, November 3, 2009

சில சிந்தனைகள் (பகுதி - 3)




சில சிந்தனைகள் (பகுதி - 3)
வெற்றிக்கான எளிய வழிகள்!




1. ஒன்றும் இல்லாதவனைக் கூட கோடீஸ்வரன் ஆக்குவது பொருள்தான். எனவே
பணத்தைச் சம்பாதியுங்கள். கஷ்டப்பட்டு முதலில் ஒரு ரூபாய் சம்பாதித்து விட்டால்,
இரண்டாவது ஒரு ரூபாய் தானே வந்து சேரும். பகைவரை வெல்லக் கூடியது,
பொருள்தான். பொருள் இருந்தால், அறம் செய்யலாம்; இன்பம் அனுபவிக்கலாம்.
ஆகவே, எந்தப்பாடு பட்டாவது பொருள் தேட முயற்சி செய்யுங்கள். பொருள்தான்
உங்களைச் செழிக்க வைக்கும் கேணி! பொருள்தான் உங்கள் வாழ்க்கைக்குத் தோணி!
பொருள்தான் உங்களை உச்சிக்கு உயர்த்தும் ஏணி! பொருளைப் போற்றுங்கள்!
போற்றுகிறவரிடம்தான் பொருள் சேரும்.


2. பொருளைச் சேர்க்கத் திட்டமிடுங்கள். திட்டமிட்டு செயலாற்றுவதே வெற்றியின்
அடிப்படை. முடிந்த இடத்தில் எல்லாம் முயற்சி செய்யுங்கள். பல வகைகளிலும்
சிந்தித்துப் பாருங்கள். ஆராய்ந்து தெளிந்து, பின் ஒரு முயற்சியில் இறங்குங்கள்.
'இது சரியான நேரம் அல்ல' என்றால், ஆறப் போடுங்கள். சூடாக செய்வது நல்லது
என்றால், காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளுங்கள்.


3. செயல்திறன் என்பது, மன ஊக்கம்தான். மனதில் உறுதியிருந்தால், வெற்றி நிச்சயம்.
துணிவுடனும் விழிப்புடனும் இருந்தால், எந்த இடையூறையும் வென்றுவிட முடியும். ஆனால்,
வீண் தம்பட்டம் அடிப்பது, கேலிக்கு இடமாகிவிடும். இடுக்கண் வந்தாலும், இழிந்த
செயல்களை செய்யக் கூடாது. வஞ்சத்தில் பொருளீட்ட முயற்சிப்பது, பச்சை மண்
பானையில் தண்ணீர் நிரப்புவதைப் போன்றது. பானையும் உடைந்து போகும்;
தண்ணீரும் ஓடிவிடும். எனவே, செய்வதைத் தூய்மையாகச் செய்யுங்கள்.


4. விசயம் தெரிந்தவர்களுடன் கலந்து ஆலோசித்துச் செய்வது, இரட்டை இலாபம்
தரும். ஒரு யானையை வைத்து அடுத்த யானையைப் பிடிப்பார்கள். அதுபோல,
ஒரு வேலையச் செய்யும்போதே, முடிந்தால் அடுத்த வேலையையும் சேர்த்துச்
செய்யுங்கள். செலவு, வரவு, நமக்கு மிச்சப்படுவது என்று கணக்குப் பார்த்து,
எதையும் செய்யுங்கள். வாரி குவித்து விடலாம் என்று ஆசைப்பட்டு, கையில்
இருப்பதையும் இழந்து விடாதீர்கள்.


5. கடுமையாக் முயற்சி செய்தால், விதியைக்கூட வென்றுவிட முடியும். முயற்சிக்கு
முட்டுக்கட்டையாக இருப்பது சோம்பல். சோம்பல் குடியை கெடுத்து விடும். சோம்பேறி
கெட்டு அழிவான். அவனுக்கு முன் அவனது தொழில் கெடும். சோம்பல், மறதி,
தூக்கம், கால தாமதம் இந்த நான்கும் நமது வெற்றியைக் கெடுக்கக் கூடியவை.


6. நமது எண்ணங்கள் எவ்வளவு சிறப்பாக இருக்கின்றனவோ, அந்த அளவுக்கு நமது
செயல்களும் சிறப்பாக இருக்கும். எனவே, கோடீசுவரன் ஆகிவிட்டது போலக் கனவு
காணுங்கள்.மாளிகையில் வாழ்வது போல, படகுக் காரில் பவனி செல்வது போல
ஒவ்வொரு இரவும் கனவு காணுங்கள்! அந்தக் கனவு கைகூடக் கடுமையாக
முயற்சி செய்யுங்கள். ஊக்கத்துடன் முயற்சி செய்தால், நிச்சயம் கை கூடும்.


7. காலம் அறிந்து செய்தால், எந்த முயற்சியும் வெற்றி பெறும். குளக்கரையில் நின்று
கொண்டிருக்கும் கொக்கு, மீன் வந்ததும், 'லபக்' என்று கொத்திக் கொள்ளும். அது போல,
காலத்தை எதிர்பார்த்து இருங்கள். காலம் வரும்போது, தவறவிடாமல், வேலையை
முடியுங்கள். காலம் வரும் வரை காத்திருப்பதைத் தோல்வி என்று நினைக்காதீர்கள்.
ஆட்டுச் சண்டை நடக்கும்போது, கிடா பின் வாங்கித் தாக்கும். புலி பதுங்கித் தாக்கும்.


8. நமது திறமை, முதலீடு போன்ற வலிமைகளை உணர்ந்து முயற்சி செய்ய வேண்டும்.
ஒரு மரத்தின் கிளைகளில் ஏறி, உச்சிக்குப் போய்விட்டோம். அதற்கு மேல் ஏறினால்
கிளை முறிந்து, நாம் கீழே விழுவோம்! அகலக் கால் வைக்கக் கூடாது! சிறுகக் கட்டிப்
பெருக வாழ்க!


9. தொழில், வியாபாரத்தில் வெற்றி பெறச் சொல்வன்மை மிக முக்கியம். சாமர்த்தியமாகப்
பேசத் தெரிய வேண்டும். அளவோடு பேச வேண்டும். சொல்லின் திறன் தெரிந்து நாம்
பயன்படுத்த வேண்டும். கேட்பவர் விரும்பும்படி பேச வேண்டும். அவருக்குப் பிடிக்காததைப்
பேசக் கூடாது. அவர் சொல்லுவதையும் நாம் காது கொடுத்துக் கேட்க வேண்டும்.வாய்ச்
சொல்லால் கெட்டவர்களும் உண்டு. எனவே, அவசரப்பட்டு வாயைத் திறக்கக் கூடாது.


10. பேச்சில் நாநயம் போல, நாணயமும் முக்கியம். இனிக்க இனிக்கப் பேசி,
ஏமாற்றக் கூடாது. உண்மையாகப் பேசவேண்டும். 'நாம் சொன்னது பொய்' என்று
தெரிந்தால் நாளை யாரும் நம்மை நம்ப மாட்டார்கள். எத்தனை நல்லவனாக, வல்லவனாக
இருந்தாலும் பொய்யன் என்று பெயர் வாங்கி விட்டால், எந்தப் பெருமையும் கிடைக்காது.


நன்றி: 'வெற்றிப்படிகள்' - முனைவர் அ.அய்யூப்


அன்பன்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.




வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Sunday, November 1, 2009

'இன்று - நண்பா' (கவிதை)

Click for Options


இந்தக் கவிதையை நான் எழுதியது 1991-ஆம் ஆண்டில். சுபாவின் 'சூப்பர் நாவல்' இதழ் போட்டியில் பரிசு பெற்று ஜூன் 1991 இதழில் வெளிவந்தது இந்தக் கவிதை.


'இன்று - நண்பா' கவிதை.


நீ நினைக்க வேண்டாம்;

செய்து முடித்து விடு.

ஒரு கொள்கை வை;

ஒரு சபதம் எடு.

தன்னம்பிக்கையுடன் துவங்கு;

உறுதியுடன் உழை.

இலட்சியமே ஓய்வு;

ஊக்கமே உணவு.

செயல்தான் துவக்கம்;

வெற்றியே முடிவு.

உன் பிரகாச முகம் பார்த்து

அந்த சூரியன் கூட

கொஞ்சம் சுருங்கிவிட்டது.

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!
Related Posts Plugin for WordPress, Blogger...